'கொக்கி குமார்' - பெயரிலேயே அந்த வன்முறை வாடை அடிக்கிறது.
ஒரு சாதாரண ரெளடியோட பையனின் வாழ்க்கை வரலாறு என்று அவ்வளவு சாதாரணமாக சொல்ல முடிவதில்லை. பள்ளி செல்லும் ஒரு பையனுடன் ஆரம்பமாகும் கதை இவ்வளவு வன்முறைகளுடன் தொடரும் என்று எதிர் பார்க்க முடியவில்லை ஆரம்பத்தில்.
ஒவ்வொரு காட்சியையும் விவரிக்க வேண்டியது திரைக்கதையே என்கிற லாஜிக்கை உடைத்துத் தள்ளி காமிரா மற்றும் முகபாவங்களில் விவரித்திருக்கிறார் இயக்குனர்.
திட£ரென்று தன் தாய் கழுத்தறுபட்டு கிடக்க, தன் அப்பாவை பார்த்து மிரண்டு அழுதல்... தன்னுடைய பரம எதிரியைக் கொல்லப் போகும் காட்சியில் சாதாரணமாக இருவரும் உட்கார்ந்து சாப்பிடுவது.... வில்லன் தன்னைத் தானே கொன்று விடுதல், வேட்பாளர் அறிவிக்கும் நேரத்தில் கதாநாயகனை பயமுறுத்தும் கட்சிப் பெருசுகள்... முதலிரவு முடிந்த மறுநாள் தன் Office!!! வந்து குதூகலத்துடன் பிதற்றுதல்... இங்கெல்லம் செல்வராகவன் தனியாகத் தெரிந்திருக்கிறார்.
இரண்டரை மணிநேர படம் என்றாலும் ஏதோ இரண்டு நாள் பார்த்த ஒரு உணர்வை அடைய வைத்திருக்கிறது திரைக்கதை. படத்தில் அவ்வளவு காட்சிகள். ஒவ்வொரு காட்சியும் சில நொடிப்பொழுது வந்து செல்வதால் இப்படி ஒரு ப்ரமை எற்படுகிறது.
மேலும் படம் முழுவதும் ஒரே வன்முறை வெறியாட்டங்கள் என்று ஒரு சாதாரண மனிதனை முகம் சுளிக்கவைப்பதால் படத்தின் ஜனரஞ்சக வெற்றி கேள்விக்குறி தான். ஆனால் ஒரு சாதாரண பையனை இப்படிக் கொடூரமாக மாற்றும் அவனுடைய உள் குணாதிசியங்களை எந்த வித கூச்சலும் இன்றி படம் பிடித்துக் காட்டியதற்காக செல்வராகவனுக்கு பாராட்டுக்கள் தகும். இந்த மாதிரி நிஜங்களை எந்த வித ஒளிவுமறைவின்றி காட்டும் படங்கள் நிறைய வரவேண்டும். இதுதான் சினிமாவை ஒரு நல்ல ஊடகமாக மாற்றும். இந்தப் படத்தின் வெற்றிதான் இந்த ட்ரெண்டை முடிவு செய்யும் என்று சொன்னால் அது மிகையாகாது.
பின்னணி இசையில் திகில் காட்சிகளை நிறைவாகவே செய்து சபாஷ் பெறுகிறார் இசையமைப்பாளர் யுவன். செல்வராகவனின் திரைக்கதைக்கு ஈடு கொடுத்திருக்கிறது அரவிந்த் கிருஷ்ணாவின் காமிரா.
முதல் பாதியில் தன் திரைக்கதையின் மூலம் ரசிகர்களைத் தன் வசம் வைத்த செல்வராகவன், இரண்டாம் பாதியில் அதைக் கோட்டை விட்டுவிட்டார் என்றே சொல்லலாம். ஒரு வித்தியாசமான கதாபாத்திரமேற்று இருக்கும் சினேகா செம்மையாக செய்திருக்கிறார். படத்தில் சோனியா அகர்வாலின் பாத்திரம் ஏன் வருகிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. அரசியல்வாதியாக வரும் அழகம்பெருமால் அசத்தியிருக்கிறார்.
மொத்தத்தில் இது ஒரு விஷப்பரீட்சை என்றே சொல்லலாம்.
Tuesday, July 18, 2006
புதுப்பேட்டை
Posted by
Muthu
at
8:30 PM
0
comments
Labels: புதுப்பேட்டை
Monday, July 17, 2006
இம்சை அரசன் 23ம் புலிகேசி
லாஜிக் என்ற ஒன்று இல்லாமல் பார்த்தால் 'சபாஷ்' என்று சொல்லலாம்தான். 'புலிகேசி' வடிவேலு, 'மங்குணி பாண்டியண்' இளவரசு காம்பினேஷன் காமெடியில் கலக்கியிருக்கிறது. ஆள் மாறாட்டம், மாமா வில்லன், இரட்டையர்களுடன் Climax சண்டை என்று பழைய அரைத்த கதை தான். இந்தக் காலத்தில் ஒரு சரித்திரக் கதை, அதுவும் காமெடியை மட்டுமே மையமாக வைத்து, எல்லாவற்றுக்கும் மேலாக வடிவேலு நாயகனாக - நிஜமாகவெ ஷங்கருக்கு நிறைய துணிச்சல்தான்.
"தத்தானுக்கு சட்டை போட்டால்...." போன்ற சில தமிழ் சிரிப்பு வெடிகள் நல்ல முயற்சி. எதிரியை எதிர்த்து தன் படை வீரர்களிடம் வெத்து வீறாப்பு பேசிவிட்டு எதிரியின் முன் போய் ஆட்டம் போட்டு அசடு வழிந்து வாங்கிக்கட்டிக் கொள்ளும் வடிவேலு பாணி நகைச்சுவை அருமை. கோட்டையின் கதவில் பழைய எண், புதிய எண், எதிர்கால எண் என்வதில் கார்டூனிஸ்ட் சிம்புதேவன் தெரிகிறார். உற்சாக பான்ங்களின் பெயர்கள் (அக்கா மாலா, கப்ஸி) போன்ற பெயர்கள் அப்படி ஒன்றும் சிரிப்புகளைத் தரவில்லை. ஜாதிச் சண்டை மைதானம், உற்சாக பான்ங்களின் பெயர்கள் - இவை எல்லாம் நடப்பு நிகழ்ச்சிகளை நக்கல் அடிதாலும் ஒருவித சோர்வையே ஏற்படுத்துகின்றன.
சரித்திரக் கதைக்கு மையமா இல்லை காமெடிக்கு மையமா என்று பயங்கரக் குழப்பத்தில் இயக்குனர் செந்தமிழ், பேச்சுத்தமிழ் என்று இரண்டையும் போட்டு குழப்பியிருக்கிறார். அந்தக் கால சரித்திரக் கதைக்கு ஏற்ப Lightings கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனாலும் எங்கோ இடிக்கிறது. சரித்திரப் படங்கள் என்றாலே எம்.ஜி.ஆர் தான் என்பதை மறுபடியும் ஊர்ஜிதப்படுத்தும் விதமாக எல்லா பாடல் காட்சிகளிலும் அவரின் நெடி அடிக்கிறது.
இயக்குனரின் கஷ்டத்தை சொல்லும் விதமாக "இரட்டைக் குழந்தைகள் பிறந்து விட்டால் திரைக்கதையில் வேறு என்ன தான் செய்வது" போன்ற வசனங்கள் தியேட்டரை அதிர வைக்கின்றன. பொற்கொல்லனாக வரும் மனோபாலா சம்பந்தப்பட்ட நகைச்சுவைகள் வயிறு குலுங்க வைக்கின்றன. Climax-ல் எல்லாம் சுபிஷமாக (வழக்கம்போல்) முடித்து வைத்திருக்கிறார்கள். என்றாலும் அந்த 10 கட்டளைகள் கொஞ்சம் அதிகம் தான். நாசர் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார்.
இன்னும் தமிழில் சரித்திரப் படங்கள் எடுக்க முடியும் அதுவும் முழு நீள நகைச்சுவைப் படமாக எடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். மொத்தத்தில் 'இம்சை அரசன்' நம்மை இம்சிக்கவில்லை.
Posted by
Muthu
at
12:50 AM
0
comments
Labels: இம்சை அரசன் 23ம் புலிகேசி
Monday, July 10, 2006
முதல் அடி
தமிழ் திரைப்படங்களின் நெளிவு சுளிவுகள், பாராட்டப்பட வேண்டிய நுணுக்கங்கள், விமர்சிக்கப் பட வேண்டிய விஷயங்கள்... இவற்றையெல்லாம் வெளிக்கொணரும் ஒரு சீரிய நோக்கில் இம்முயற்சியைத் தொடங்கியுள்ளோம்.
எங்களுக்கான விமர்சனங்களையும் எதிர்பார்கிறோம்....
Posted by
Muthu
at
5:36 AM
0
comments
Labels: முன்னுரை
