'வல்லவன்' - படமெல்லம் நன்றாகத்தான் ஆரம்பமாகிறது. ஏன் ஹீரோவிற்கு 'வல்லவன்' என்ற பெயர். அம்மா அப்பாவே அந்தப் பெயர்தான் வைத்தார்களோ? ஹீரோ அறிமுகம் ஆகும் பாடலுக்கு ஏன் அந்த 'பில்டப்' என்று தெரியவில்லை. சிம்பு 'மாஸ் ஹீரோ' முயற்சிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
தன்னை விட வயது மூத்த பெண்ணை காதலிப்பது என்ற ஒற்றை வரிக்கதையை எடுத்திருப்பது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தப் பெண்ணை 'மடக்க' அவர் கையாளும் விஷயங்கள் ரொம்பவும் அரதப் பழசு. நயன் தாரா "நான் உனக்குத்தான்" என்று சொல்வதில் சுரத்தையே சுத்தமாக இல்லை.
நடு நடுவே வரும் சந்தானம் மற்றும் அவர் நண்பர்களும், நயன் தாரா தரப்பில் வரும் நண்பர்களில் அந்த ஒருவனும் 'காமெடி' யில் அசத்தியிருக்கிறார்கள். நயன் தாராவிற்கு வயது குறைவான பையனை காதலிப்பது பிடிக்காது என்று முதலிலேயே சொல்லியிருந்தாலாவது படத்தில் ஒரு 'த்ரில்' இருந்திருக்கும். சிம்புவிற்கு வயது குறைவு என்று குட்டு உடையும் காட்சியில் ஏன் அப்படி ஒரு சொதப்பல்? யாரோ ஒருவன் சொல்லியிருப்பது போல் காட்டியிருக்கும் அந்தக் காட்சி அமைப்பு ரொம்பவே சொதப்பல். படம் முழுக்க ஒரே கத்தல். காது வலிக்கிறது
நயன் தாராவிற்குப் பார்க்கும் மாப்பிள்ளை 'இட்ஸ் ஆல்ரைட்' என்று சொல்வதாகக் காட்டப்படும் அந்தக் காட்சி தமிழ் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது. படத்தில் பல காட்சிகள் ஏன் வருகின்றன என்றே தெரியவில்லை. சில காட்சிகளில் 'எடிட்' செய்யவில்லையோ என்று முதல் வரிசை ரசிகன் கூட முனுமுனுக்கிறான். படத்தில் ரீமாசென் மற்றும் சந்தியா வரும் காட்சிகளின் அவசியம் தெரியவில்லை.
பின்னணி இசையில் யுவன் கலக்கியிருந்தாலும் சில இடங்களில் 'ஓவர்டோஸ்' ஆகத் தெரிகிறது. எடிட்டிங் படுமோசம். ஒளிப்பதிவு அதற்குமேல். காமிராவை ஒரு இடத்தில் நிலையாக வைத்திருக்கலாம். கடைசியாக வரும் அந்த 'யம்மாடி...' பாடலின் நடனம் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். அந்தப் பாடலில் நடனம், இசை, காட்சியமைப்பு என்று எல்லாமே நன்றாக ஒன்று கூடி வந்திருக்கிறது. இயக்கம் படுமோசம். சிம்பு இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே உள்ளது என்று தெரிகிறது. படம் முழுவதும் உட்கார முடியாமல் ரசிகர்கள் நெளிவது தத்ரூபமாகத் தெரிகிறது. அதுவும் இரண்டாவது பாதியில் பொறுமையின் உச்சத்திற்கே சென்று விடுகிறார்கள் ரசிகர்கள். ரீமாசென்னிற்கு ஏன் அந்த மாதிரி ஒரு பாத்திரப் படைப்பு?!
மொத்த்த்தில் 'வல்லவன்' கொன்று விட்டான் ரசிகர்களை.
Tuesday, February 06, 2007
வல்லவன்
Posted by
Muthu
at
12:54 AM
0
comments
Labels: வல்லவன்
Thursday, February 01, 2007
குரு
குரு - மணிரத்னம் படம் என்று வித்தியாசப்படுத்த முடியும் அளவில் வந்திருக்கிறது. ஒரு மனிதனின் வாழ்க்கையையும் முன்னேற்றத்தையும் எந்த இடத்திலும் 'சோர்வு' என்ற ஒன்று ஏற்படாமல் மூன்று மணி நேரம் கொண்டுபோவது மிக அசாதாரண காரியம். அந்த முயற்சியில் மணிரத்னம் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்லவேண்டும்.
எல்லா விமர்சனங்களும் ஊடகங்களும் இந்த படம் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரது வாழ்க்கையை பிரதிபலிக்கிறது என்று சொன்னாலும் இதெல்லாம் தெரியாமல் போகும் ஒரு சாதாரண ரசிகனுக்கு ஒரு யதார்த்த வாழ்க்கையை கண்ட திருப்தி ஏற்படும் என்பதில் அச்சமில்லை.
கதாநாயகன் - வில்லன், நல்லவன் - கெட்டவன் என்ற வழக்கமான இந்திய திரைக்கதைகளிலிருந்து 'குரு' ரொம்பவே விலகி யதார்த்தமான வாழ்வைக் கொடுத்திருக்கிறது. படத்தில் வட இந்திய சாயல் ரொம்பவே இருப்பதால் கதாப்பதிரங்களும் காட்ச்சியமைப்புகளும் நிறைய இடங்களில் ஒட்ட மறுக்கின்றன. படத்தின் சுய உரு இந்தி என்பதால் இவற்றை ஓரளவு ஒத்துக்கொள்ள முடிகிறது.
ஹீரோயிசம் என்பது எங்கும் தலை தூக்கக்கூடாது என்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 'க்ளைமாக்ஸ்' ல் கூட அந்த விசயம் எட்டிப் பார்க்கவில்லை. ஆனால் திரைக்கதையில் 'க்ளைமாக்ஸ்' மட்டும் கொஞ்சம் சொதப்பியிருப்பது நன்றாகவே தெரிகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கிறங்கடிக்கிறார். ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவு துள்ளி விளையாடுகிறது. காட்சியமைப்புகளின் வேகம் ஒரே சீரான வேகத்தில் செல்வதால் படத்தோடு ஒன்ற முடிகிறது. இஸ்தான்புல் காட்சியமைப்புகள் தமிழுக்கு புதிது.
திரைக்கதைகளில் எந்த ஒரு கதாநாயகனும் தேவையில்லை. திரைக்கதையும் அதன் யதார்தமும் மட்டுமே நல்ல படங்களாக வரும் என்பதை இந்திய சினிமாவிற்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தியிருக்கிறார் மணிரத்னம். இந்திய சினிமாவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல இந்தப்படம் ஒரு நல்ல ஆரம்பம்.
படங்களில் ஏதாவது ஒரு கதாப்பாத்திரத்தைச் சார்ந்தே ரசிக்கத்தெரிந்த நம் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு ரசனைச் சவால் தான். குருராஜ் என்ற கதாப்பாத்திரத்தின் அறிவையும் திறனையும் ஒரு புறம் ரசித்தாலும் பின்பகுதிகளில் வரும் காட்சிகள் அவரின் முகமுடியை சரியாக் கிழிக்கின்ற்ன.
லட்சியத்திற்காக இயங்கும் ஒரு பத்திரிக்கை, அதற்கு ஒரு லட்சிய ஆசிரியர். அவருக்கு வலக்கையாக நேர்மையும் சாதுர்யமும் நிறைந்த ஒரு பத்திரிக்கையாளன், ஆசிரியரின் மகளாக் நோய்வாய்ப்பட்ட ஒரு மகள். இவர்கள் அனைவருக்குமான உறவை சுருக்கமாகவும், அழுத்தமாகவும், திருத்தமாகவும் கதை நாயகனான தொழிலதிபருடன் இவர்களின் உறவையும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். நடிப்பில் வித்யாபாலன், மாதவன், மிதுன் சக்ரவர்த்தி என்று போட்டிபோட்டாலும் ஐஷ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் மின்னுகிறார்கள். இருவரின் நடிப்புமே மிக யதார்த்தம். அதுவும் அபிஷேக்கின் அந்தச் சிரிப்பில் நிறைய அர்த்தங்கள் தெரிகின்றன. சில இக்கட்டான சூழ்நிலைகளை திரையில் யதார்த்தமாகத் தெரிய வைத்ததில் அபிஷேக்கின் கட்சிதமான நடிப்பு மிகவும் உதவி இருக்கிறது. ஐஷ்வர்யா ராயின் அழகு அவரின் நடிப்பால் கூடியிருப்பது போல் ஒரு உணர்வு. மாதவன், வித்யா பாலன் இருவரும் தேவைக்கு ஏற்ற அளவு நடித்து கைதட்டலை அள்ளிச்செல்கிறார்கள்.
திரைக்கதை, வசனம், நடிப்பு, இசை, ஒளிப்பதிவு எல்லாவற்றிலும் படம் பெரிய அளவு பாராட்டப் பட்டாலும் படத்தில் ஒரு மிகப்பெரிய குறை ஒன்று உள்ளது. படத்தின் ஆக்கம் இந்தியில் என்பதால் காட்சிகளும், கதாபாத்திரப் படைப்புகளும், காட்சிகளின் அமைப்புகளும் தமிழில் ('டப்' செய்யப் பட்டது) பார்க்கும்போது சில இடங்களில் ஒரு அந்நியத் தன்மையால் ஒட்ட மறுக்கின்றன.
இந்தப்படம் கண்டிப்பாக இந்திய சினிமாவிற்குத் தேவையான ஒரு முயற்சி. கண்டிப்பாக மணிரத்னத்திற்கு அதற்கான பாராட்டுக்களும் பெருமைகளும் வந்து சேரும் என்பதில் ஐய்யமில்லை.
Posted by
Muthu
at
2:43 AM
0
comments
Labels: குரு
ராம்
ராம் - தமிழ் சினிமா உலகிற்கு மற்றுமொரு வித்தியாசமான ஆரோக்கியமான படம் என்று சொல்லலாம்.
மிகவும் அருமையாகப் பின்னப்பட்ட திரைக்கதை. ஆச்சர்யப்பட வேண்டிய இயக்கம். இவற்றிற்கு ஈடுகொடுக்கும் இசை என்ற சரியான கூட்டணி. மிக அருமையான ரசிக்க வேண்டிய ஒற்றை வரிக் கதைக்கரு. படத்தில் எல்லாக் காட்சிகளையும் பாராட்ட வேண்டும் போல் தோன்றுகிறது. இவ்வுலக உயிர்களனைத்திடமும் பாசம் கொண்ட ஒரு இளைஞன் தன் தாயுடன் தனியாக வளரும் சூழல். அவன் ஆன்மீகத்திடம் ஈர்ப்பு கொள்ளக் காரணம் என்று யதார்த்தமாக நகரும் கதை.
அந்த இளைஞனின் குணங்களை, அவன் தாய் மேல் வைத்துள்ள பாசத்தை சிறு சிறு காட்சிகளாய் சிறப்பாகக் கொண்டுபோயுள்ளார் இயக்குனர். ஜீவாவிற்குள் இருக்கும் நடிகருக்கு சரியான தீனி இந்த ராம். அம்மாவாக வரும் சரண்யாயும் அவரது பாசமான முகமும் இன்னும் அப்படியே கண்ணுக்குள் இருக்கிறது.
படத்தில் ராமாக வரும் அந்த கதாபாத்திரம் கொஞ்சம் கூட ஒரு மனநலம் பாதிக்கபட்ட உணர்வை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் அதிக கவனம் செய்யப்பட்டுள்ளது பாராட்டப்பட வேண்டியது. விடலைப் பருவத்தில் சில விஷயங்களுக்கு பயந்து அதைவிடக் கொடிய குற்றங்களைப் பண்ணிவிடும் போக்கை அருமையாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குனர். ப்டத்தில் அம்மாவை யார் கொன்றார்கள் என்பதை அருமையான திகிலுடன் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர். ப்டம் முழுக்க சீட்டின் நுனியில் உட்காரவைத்து விட்டார் இயக்குனர்.
படத்தில் பாடல்கள் அனைத்துமே அருமை. இசையில் மட்டுமள்ள பாடல் வரிகளிலும் காட்சிக்கோர்வைகளிலும். தனக்குள் ஒரு குட்டி இளையராஜா இருப்பதை இதில் நிரூபித்திருக்கிறார் யுவன். ஒவ்வொரு காட்சிகளின் கோர்வையும் அவற்றின் நுண்ணிய பின்னல்களும் வியக்கவைக்கின்றன. இயக்குனர் அமீர் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்.
தமிழ் சினிமாவிற்கு 'ராம்' ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். இது போன்ற படங்களே நல்ல ஆரோக்கியமான ரசனைக்கு வழிவகுக்கும்.
Posted by
Muthu
at
2:43 AM
0
comments
Labels: ராம்
