Tuesday, October 10, 2006

வேட்டையாடு விளையாடு

படத்தின் ஆரம்பமே பாட்டு+சண்டை என்று ஜிவ்வென்று ஏறுகிறது. அந்த 'கற்க கற்க..' பாடலின் இசை, காமிரா, இயக்கம் எல்லாமே பிரமிக்க வைக்கின்றன. இப்படி ஆரம்பமாகிற படம் திடீரென்று மதுரைப் பக்கம் போய் சட்டென்று ஒற்றை விரலில் திகிலைக் கொடுக்கிறது. அங்கு ஆரம்பிக்கும் ஒரு த்ரில்லை படத்தின் பாதி வரை மட்டுமே இயக்குனர் கெளதம்-ஆல் கொண்டு போக முடிகிறது. திடீரென்று நியூயார்க் செல்லும் ப்ரகாஷ்ராஜ்-ம் அவரது மனைவியும் கொல்லப்படுவது என்று கதை நன்றாகவே ஓடுகிறது. மிகச்சில நிமிடங்களே வந்தாலும் ப்ரகாஷ்ராஜ் உணர்வுப்பூர்வமாக அருமையாக நடித்திருக்கிறார். கமல் - சொல்லவே தேவை இல்லை. அலட்டிக்கொல்லாமல் அற்புதப்படுத்தியிருக்கிறார். DCP என்ற ஒரு பெரிய பதவி அவரை ஒன்றுமே செய்யவில்லை தான்.

படத்தின் கதை பற்றி குறை கூறுவதற்கு ஒன்றும் இல்லை. அருமையான கதை தான். திரைக்கதையில் தான் சில இடங்களில் சறுக்கி இருக்கின்றனர். இரண்டாம் பாதியின் முதல் பாதியிலேயே குற்றவாளிகள் பிடிபட்டுவிடுவார்கள் என்பது போல் காட்டிவிட்டு அதற்கப்புறமும் படம் ஒரு மணி நேரம் போவது கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது. அதுவும் ஜோ-கமல் காட்சிகள் இரண்டாம் பாதியின் இரண்டாம் பாதியை ரொம்பவே ஆரம்பிக்கின்றன. அதை அவ்வப்போது இடையிடையே இழையோட விட்டிருக்கலாம். தமிழ் படத்திற்கான அத்தனை இலக்கணங்களையும் உடைத்திருந்தாலும் இந்த ஜோ-கமல் ரொமான்ஸ் வேண்டுமென்றே புகுத்தியது போல் இருந்தது. ஆனாலும் கதைக்கு இது ரொம்பவே தேவைப்பட்டது போலத்தான் இருக்கிறது.

மாயா(ஜோ)வின் கதாபாத்திரம் அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாவல்களில் வரும் கதாபாத்திரம் போல நன்றாகவே கதைக்குள் இழையோடியிருக்கிறது. ஜோவும் ரொம்பவே முயன்றிருக்கிறார். தன்னுடைய மற்ற படங்களில் வசனங்களில் ரொம்பவே கவனம் செலுத்தியிருந்த இயக்குனர் கெளதம் இந்த படத்திலும் அதைத் தவறவில்லை. ராகவனிடம் மாயா சொல்லும் 'சில விஷயங்களை சொல்லாமல் இருக்கிறது தான் நல்லதுன்னு உங்களுக்கு தெரீலல', கஃபே-யில் இருவரும் சந்தித்து பேசிக்கொள்ளும் வசனங்கள், கயல்-ராகவன் சந்தித்துக்கொள்ளும் கல்யாணக்காட்சி வசனங்கள் எல்லாம் பின்னியிருக்கின்றன. (உ.தா. 'சாப்பாடு தான் அவரோட வீக்னஸ்... இப்போ நானும்...').

யாருப்பா அந்த கயல்விழி. அப்படியே இன்னும் மனசில் நிற்கிறார். அதுவும் 'பார்த்த நாள் முதலே...' பாடலில் அப்படி ஒரு ஆக்கிரமிப்பு. பட்டுப் புடவையில் கமலை முதன் முதலாக சந்திக்கும் அந்தக் காட்சியில் நடிக்க கொஞ்ச நேரமே வாய்ப்பு கிடைத்தாலும் பரிபூரணமாகவே பண்ணியிருகிறார் கமலினி முகர்ஜி. தமிழ் சினிமா ரசிகர்கள் இனி வரும் படங்களில் கொடுத்து வைத்திருகிறார்களா என்று பார்க்கலாம்.

பின்னணி இசையில் ஹாரிஸ் ஜெயராஜ் அருமையாகவே ஸ்கோர் பண்ணியிருக்கிறார். கண்டிப்பாகப் பாராட்டியே ஆகவேண்டும். அந்த த்ரில் காட்சிகள் மற்றும் நியூயார்க் அறிமுகக் காட்சிகள் என்று கலக்கியிருக்கிறார். அனைத்து பாடல்களுமே அருமை.

ஒளிப்பதிவாளரும் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். நியூயார்க்-ஐ தமிழ் படங்களில் இவ்வளவு பிரம்மாண்டமாக அழகாக இதுவரை எவருமே காட்டவில்லை என்றே சொல்லலாம்.

யாருப்பா அந்த கயல்விழி. அப்படியே இன்னும் மனசில் நிற்கிறார். அதுவும் 'பார்த்த நாள் முதலே...' பாடலில் அப்படி ஒரு ஆக்கிரமிப்பு. பட்டுப் புடவையில் கமலை முதன் முதலாக சந்திக்கும் அந்தக் காட்சியில் நடிக்க கொஞ்ச நேரமே வாய்ப்பு கிடைத்தாலும் பரிபூரணமாகவே பண்ணியிருகிறார் கமலினி முகர்ஜி. தமிழ் சினிமா ரசிகர்கள் இனி வரும் படங்களில் கொடுத்து வைத்திருகிறார்களா என்று பார்க்கலாம். தமிழ் சினிமா ரசிகர்களை கொஞ்ச நாட்களுக்கு இனி தூங்கவிட மாட்டார் என்றே நினைக்கிறேன்.

பின்னணி இசையில் ஹாரிஸ் ஜெயராஜ் அருமையாகவே ஸ்கோர் பண்ணியிருக்கிறார். கண்டிப்பாகப் பாராட்டியே ஆகவேண்டும். அந்த த்ரில் காட்சிகள் மற்றும் நியூயார்க் அறிமுகக் காட்சிகள் என்று கலக்கியிருக்கிறார். அனைத்து பாடல்களுமே அருமை.

ஒளிப்பதிவாளரும் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். நியூயார்க்-ஐ தமிழ் படங்களில் இவ்வளவு பிரம்மாண்டமாக அழகாக இதுவரை எவருமே காட்டவில்லை என்றே சொல்லலாம்.

ஆண்டர்சன் - ஆக வரும் அந்த நடிகரும் தன் பங்கிற்கு ரொம்பவே காஷுவலாக வந்து போயிருகிறார். தமிழ் சினிமாவிற்கு இதுவும் புதுசுதான். ஆனாலும் அவரை பட்டுனு போட்டு விடுவதும் தமிழ் சினிமாவிற்கு புதுசு தான்.

அமெரிக்க கதாபாத்திரங்கள் எல்லாம் ஆங்கிலம் பேசுவது படதிற்கு உயிர் ஊட்டுகிறது. நன்றாக நேட்டிவிடி காட்டிருகிறார்கள். அமுதனாக வரும் டேனியல் பாலாஜி பின்னிப் பெடலெடுத்திருகிறார். அப்படி ஒரு நடிப்பு. எப்படி கெளதம் படங்களில் மட்டும் இவருக்கு இப்படி வாய்ப்புகள்!. கடைசி காட்சியில் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் அமுதன் பேசும் சில வசனங்கள் (நாங்கள் தான் உலகிலேயே மிகச்சிறந்த் டாக்டர்கள்... சாகாவரம் ஆராய்ச்சி...) சைக்கலஜிக்கலாக நன்கு யோசித்து எழுதப்பட்டவை போலத் தோன்றுகின்றன.

கெளதம் கலக்கி இருகிறார். என்றாலும் இன்னும் கூட கலக்கி இருக்கலாம் என்றே தோன்றுகிறது. காக்க காக்க மாதிரி வரவில்லை என்று திரையரங்கில் முனுமுனுப்புகள் நன்றாகவே கேட்கின்றன.

மொத்ததில் 'வேட்டையாடு விளையாடு' ரசிகர்களுக்கு நல்ல வேட்டை.

Tuesday, October 03, 2006

கேடி

கேடி - படம் எதோ ரொளடி படமாக இருக்கும் என்று எதிர் பார்த்துப் போகிறவர்களுக்கு ஏமாற்றம் தான்.

எதோ ஒரு த்ரில் படம் போல ஆரம்பமாகும் படத்தில் அந்த த்ரில்லை தக்கவைக்க தவறிவிட்டார் இயக்குனர். படத்தின் காதல் காட்சிகளும் ஏனாதானோ என்று தான் இருகின்றன. படத்தில் 2 ஹீரோயின்கள். நடிக்க ரொம்பவே முயற்சித்திருகிறார்கள். ஹீரோ விற்கு நடிக்க, நடனமாட வகுப்பு எடுத்தால் நன்றாக இருக்கும். மொத்தப் படத்தின் கதையை கடைசி 10 நிமிடத்தில் தான் வைத்திருக்கிறார்கள். அதற்காக இரண்டரை மணி நேர அவஸ்த்தை ரொம்ப அதிகம் தான்.

இரண்டாவது பாதியில் படத்தின் கொடுமை தாங்க முடியாமல் "பாட்டையாவது போடுங்கப்பா..." என்று ரசிகர்கள் குரல் கேட்கிறது. பாடல் வந்தவுடன் எல்லோரும் 'தம்' அடிக்க வெளியே சென்றுவிடுகிறார்கள். அந்த அளவுக்கு இசையும் கொடுமை.

மொத்ததில் படத்திற்கு யாருமே கைகொடுக்கவில்லை.

"கேடி" ரொம்பவே கடி.

Friday, September 29, 2006

சில்லுனு ஒரு காதல்

சில்லுனு ஒரு காதல் - பெயருக்கு ஏற்ற மாதிரி ஒரு chillness எதிர்பார்த்துப் போகிறவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். படத்தில் காதல் இருந்தது... அந்த chillness தான் மிஸ்ஸிங்.

அம்பையில் ஆரம்பமாகிறது கதை. பசுமையை எல்லாம் அள்ள வேண்டிய காமிராவில் அப்போதே அவை எல்லாம் மிஸ் ஆகிவிட்டன. குந்தவையின் கல்யாணம் நிச்சயமாகிற அந்த காட்சிகளே இல்லை. அதுவும் குந்தவை என்கிற பெண்ணின் ஆசைகளை சொல்ல வந்த டைரக்டர் அந்த காட்சிகளைத் தவற விட்டுவிட்டார். பிடிக்காமல் கல்யாணம் பண்ணின அந்த ஜோடி 6 வருஷங்களுக்கு பிறகு என்று கதை ஆரம்பமாக... அந்த 6 வருட ரொமான்ஸும் மிஸ்ஸிங். கடைசியில் ரொமான்ஸை இன்னும் அழகாகவே காட்டி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

அந்த குட்டி ஐஸ் யாருப்பா. எல்லோரையும் கவர்ந்து விடுகிறாள். படம் முழுவதுமே காமிராவில் எங்கோ ஒன்று குறைகிறது. அந்த ரிச்னெஸும் லைட்டிங்கும் இன்னும் நிறையவே தேவை. மாருதி ஸுஸூகி ஃபேக்டரி காட்சிகள் எல்லாம் நன்றாகத்தான் காட்டியிருக்கிறார்கள்.

படம் முழுக்க பார்க்கும்போது சில காட்சிகள் மனதில் நின்றாலும் படம் முழுதும் அந்த கண்டினுய்டி யும் கன்ஸிஸ்டென்சி யும் இல்லை. படத்தின் அனைத்து முக்கிய காட்சிகளிலும் அழுத்தம் என்ற ஒன்று இல்லவே இல்லை. சில இடங்களில் வார்த்தை மட்டுமே விளையாடி இருக்கிறது. இது வார்தைகளால் விளையாட வேண்டிய கதை தான். ஆனால் சில காட்சிகளில் வசனம் மட்டுமே நன்றாக இருகின்றது. அதுவும் அந்த காட்சிகள் எல்லாம் பாதியிலேயே கட் ஆன மாதிரி ஒரு உணர்வு.

காலேஜ் காதல் காட்சிகள் எல்லாமே இன்னும் கொஞ்சம் அழகாக எடுத்திருக்கலாம் என்று சொல்லும் அளவுக்குத் தான் இருந்தன. "எனக்கு பயமா இருக்கு கௌதம்...", "நீ மட்டும் பார்க்க வேண்டிய உடம்பை..." - இந்த இரண்டு வசனங்களும் தனித்து நிற்கின்றன. பதிவுத் திருமணத்திற்கு சென்ற பின்னும் ஒரு சின்ன நெருடலுடன் ஐஸ்வர்யா கதாபாத்திரம் "நாம எடுத்த டெசிசன் சரி தானா?" என்று கேட்கிற விதம் ரொம்பவே யதார்த்தம்.

மியூசிக்கும் சொல்லிக் கொள்வது போல் நிறைய இடங்களில் இல்லை.

பூமிகாவை மறுபடியும் கூட்டி வந்து ஒரு நாள் வாழ வைக்க ஜோ சொல்லும் காரணம் ரொமான்ஸின் உச்சம். பூமிகா மற்றும் சூர்யாவின் அந்த ஒரு நாள் கனவு காட்சிகள் எல்லாம் தமிழ் சினிமாவிற்கும் கலாச்சாரத்திற்கும் புதிது தான். அது வெறும் கனவு தான் என்பதை சொன்ன விதம் அழுத்தமானதாக இல்லாதது கொஞ்சம் மைனஸ் தான்.

ஜோவின் நடிப்பு நன்றாகவே மெருகேறி இருக்கிறது. அழும் காட்சிகளில் நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார். யாரப்பா அந்த குட்டி ஐஸ். வெளுத்து வாங்கி இருக்கிறார். பூமிகா தனக்கு கொடுத்த பாத்திரத்தை நன்றாகவே செய்திருகிறார். சூர்யாவும் அப்படித் தான். வடிவேலு வேண்டுமா என்று கேட்க வைத்திருக்கிறார். ஜோவின் குடும்பத்தை அவ்வளவு பெரிதாகக் காண்பித்தது எதற்கு என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. பூமிகாவின் இரண்டாம் பாதி உடைகளில் கச்சிதமாகப் பொருந்தி இருகிறார்.

பூமிகா சூர்யாவை பார்க்க வீட்டுக்கு வரும் அந்த காட்சியில் பின்னணி இசை பின்னி இருக்கிறது. கையாள்வதற்கு கடினமான இந்த காட்சியை மிக நேர்த்தியாக கையாண்டிருகிறார் இயக்குனர். மூவரின் நடிப்பும் அசத்தலாக உள்ளது இந்த காட்சியில். அந்த ஒரு நாள் வாழ்க்கை என்பதில் நிறைய லாஜிக் இடிக்கிறது இயக்குனரே.

நிறைய இடங்களில் டைரக்டர் நன்றாக எடுத்திருந்தாலும் கன்ஸிஸ்டன்சி இல்லை. தான் தான் கௌதமின் மனைவி என்று ஜோ அறிமுகம் செய்து கொள்ள... "அப்போ நான் யார்..." என்பது போன்ற வசனங்கள் கச்சிதம். ஆனால் அது கூட ஏதோ எடிட்டிங்-ல் பாதியிலேயே கட் ஆன மாதிரி ஒரு உணர்வை ஏற்படுத்துவது உண்மை தான்.

ஒளிப்பதிவாளரும் டைரக்டரின் வழியிலேயே சென்றிருகிறார். அங்கும் கன்ஸிஸ்டன்சி மிஸ்ஸிங். BGM இல் சொல்லி கொள்வது போல் காட்சிகள் இல்லை, பூமிகா சூர்யாவை பார்க்க வீட்டுக்கு வரும் காட்சியைத் தவிர.

மொத்தத்தில் 'சில்லுனு ஒரு காதல்' சில்லென்று இல்லை. சப்பென்று இருந்தது.

Tuesday, July 18, 2006

புதுப்பேட்டை

'கொக்கி குமார்' - பெயரிலேயே அந்த வன்முறை வாடை அடிக்கிறது.

ஒரு சாதாரண ரெளடியோட பையனின் வாழ்க்கை வரலாறு என்று அவ்வளவு சாதாரணமாக சொல்ல முடிவதில்லை. பள்ளி செல்லும் ஒரு பையனுடன் ஆரம்பமாகும் கதை இவ்வளவு வன்முறைகளுடன் தொடரும் என்று எதிர் பார்க்க முடியவில்லை ஆரம்பத்தில்.

ஒவ்வொரு காட்சியையும் விவரிக்க வேண்டியது திரைக்கதையே என்கிற லாஜிக்கை உடைத்துத் தள்ளி காமிரா மற்றும் முகபாவங்களில் விவரித்திருக்கிறார் இயக்குனர்.

திட£ரென்று தன் தாய் கழுத்தறுபட்டு கிடக்க, தன் அப்பாவை பார்த்து மிரண்டு அழுதல்... தன்னுடைய பரம எதிரியைக் கொல்லப் போகும் காட்சியில் சாதாரணமாக இருவரும் உட்கார்ந்து சாப்பிடுவது.... வில்லன் தன்னைத் தானே கொன்று விடுதல், வேட்பாளர் அறிவிக்கும் நேரத்தில் கதாநாயகனை பயமுறுத்தும் கட்சிப் பெருசுகள்... முதலிரவு முடிந்த மறுநாள் தன் Office!!! வந்து குதூகலத்துடன் பிதற்றுதல்... இங்கெல்லம் செல்வராகவன் தனியாகத் தெரிந்திருக்கிறார்.

இரண்டரை மணிநேர படம் என்றாலும் ஏதோ இரண்டு நாள் பார்த்த ஒரு உணர்வை அடைய வைத்திருக்கிறது திரைக்கதை. படத்தில் அவ்வளவு காட்சிகள். ஒவ்வொரு காட்சியும் சில நொடிப்பொழுது வந்து செல்வதால் இப்படி ஒரு ப்ரமை எற்படுகிறது.

மேலும் படம் முழுவதும் ஒரே வன்முறை வெறியாட்டங்கள் என்று ஒரு சாதாரண மனிதனை முகம் சுளிக்கவைப்பதால் படத்தின் ஜனரஞ்சக வெற்றி கேள்விக்குறி தான். ஆனால் ஒரு சாதாரண பையனை இப்படிக் கொடூரமாக மாற்றும் அவனுடைய உள் குணாதிசியங்களை எந்த வித கூச்சலும் இன்றி படம் பிடித்துக் காட்டியதற்காக செல்வராகவனுக்கு பாராட்டுக்கள் தகும். இந்த மாதிரி நிஜங்களை எந்த வித ஒளிவுமறைவின்றி காட்டும் படங்கள் நிறைய வரவேண்டும். இதுதான் சினிமாவை ஒரு நல்ல ஊடகமாக மாற்றும். இந்தப் படத்தின் வெற்றிதான் இந்த ட்ரெண்டை முடிவு செய்யும் என்று சொன்னால் அது மிகையாகாது.

பின்னணி இசையில் திகில் காட்சிகளை நிறைவாகவே செய்து சபாஷ் பெறுகிறார் இசையமைப்பாளர் யுவன். செல்வராகவனின் திரைக்கதைக்கு ஈடு கொடுத்திருக்கிறது அரவிந்த் கிருஷ்ணாவின் காமிரா.

முதல் பாதியில் தன் திரைக்கதையின் மூலம் ரசிகர்களைத் தன் வசம் வைத்த செல்வராகவன், இரண்டாம் பாதியில் அதைக் கோட்டை விட்டுவிட்டார் என்றே சொல்லலாம். ஒரு வித்தியாசமான கதாபாத்திரமேற்று இருக்கும் சினேகா செம்மையாக செய்திருக்கிறார். படத்தில் சோனியா அகர்வாலின் பாத்திரம் ஏன் வருகிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. அரசியல்வாதியாக வரும் அழகம்பெருமால் அசத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் இது ஒரு விஷப்பரீட்சை என்றே சொல்லலாம்.

Monday, July 17, 2006

இம்சை அரசன் 23ம் புலிகேசி

லாஜிக் என்ற ஒன்று இல்லாமல் பார்த்தால் 'சபாஷ்' என்று சொல்லலாம்தான். 'புலிகேசி' வடிவேலு, 'மங்குணி பாண்டியண்' இளவரசு காம்பினேஷன் காமெடியில் கலக்கியிருக்கிறது. ஆள் மாறாட்டம், மாமா வில்லன், இரட்டையர்களுடன் Climax சண்டை என்று பழைய அரைத்த கதை தான். இந்தக் காலத்தில் ஒரு சரித்திரக் கதை, அதுவும் காமெடியை மட்டுமே மையமாக வைத்து, எல்லாவற்றுக்கும் மேலாக வடிவேலு நாயகனாக - நிஜமாகவெ ஷங்கருக்கு நிறைய துணிச்சல்தான்.

"தத்தானுக்கு சட்டை போட்டால்...." போன்ற சில தமிழ் சிரிப்பு வெடிகள் நல்ல முயற்சி. எதிரியை எதிர்த்து தன் படை வீரர்களிடம் வெத்து வீறாப்பு பேசிவிட்டு எதிரியின் முன் போய் ஆட்டம் போட்டு அசடு வழிந்து வாங்கிக்கட்டிக் கொள்ளும் வடிவேலு பாணி நகைச்சுவை அருமை. கோட்டையின் கதவில் பழைய எண், புதிய எண், எதிர்கால எண் என்வதில் கார்டூனிஸ்ட் சிம்புதேவன் தெரிகிறார். உற்சாக பான்ங்களின் பெயர்கள் (அக்கா மாலா, கப்ஸி) போன்ற பெயர்கள் அப்படி ஒன்றும் சிரிப்புகளைத் தரவில்லை. ஜாதிச் சண்டை மைதானம், உற்சாக பான்ங்களின் பெயர்கள் - இவை எல்லாம் நடப்பு நிகழ்ச்சிகளை நக்கல் அடிதாலும் ஒருவித சோர்வையே ஏற்படுத்துகின்றன.

சரித்திரக் கதைக்கு மையமா இல்லை காமெடிக்கு மையமா என்று பயங்கரக் குழப்பத்தில் இயக்குனர் செந்தமிழ், பேச்சுத்தமிழ் என்று இரண்டையும் போட்டு குழப்பியிருக்கிறார். அந்தக் கால சரித்திரக் கதைக்கு ஏற்ப Lightings கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனாலும் எங்கோ இடிக்கிறது. சரித்திரப் படங்கள் என்றாலே எம்.ஜி.ஆர் தான் என்பதை மறுபடியும் ஊர்ஜிதப்படுத்தும் விதமாக எல்லா பாடல் காட்சிகளிலும் அவரின் நெடி அடிக்கிறது.

இயக்குனரின் கஷ்டத்தை சொல்லும் விதமாக "இரட்டைக் குழந்தைகள் பிறந்து விட்டால் திரைக்கதையில் வேறு என்ன தான் செய்வது" போன்ற வசனங்கள் தியேட்டரை அதிர வைக்கின்றன. பொற்கொல்லனாக வரும் மனோபாலா சம்பந்தப்பட்ட நகைச்சுவைகள் வயிறு குலுங்க வைக்கின்றன. Climax-ல் எல்லாம் சுபிஷமாக (வழக்கம்போல்) முடித்து வைத்திருக்கிறார்கள். என்றாலும் அந்த 10 கட்டளைகள் கொஞ்சம் அதிகம் தான். நாசர் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார்.

இன்னும் தமிழில் சரித்திரப் படங்கள் எடுக்க முடியும் அதுவும் முழு நீள நகைச்சுவைப் படமாக எடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். மொத்தத்தில் 'இம்சை அரசன்' நம்மை இம்சிக்கவில்லை.

Monday, July 10, 2006

முதல் அடி

தமிழ் திரைப்படங்களின் நெளிவு சுளிவுகள், பாராட்டப்பட வேண்டிய நுணுக்கங்கள், விமர்சிக்கப் பட வேண்டிய விஷயங்கள்... இவற்றையெல்லாம் வெளிக்கொணரும் ஒரு சீரிய நோக்கில் இம்முயற்சியைத் தொடங்கியுள்ளோம்.

எங்களுக்கான விமர்சனங்களையும் எதிர்பார்கிறோம்....