Thursday, February 01, 2007

குரு

குரு - மணிரத்னம் படம் என்று வித்தியாசப்படுத்த முடியும் அளவில் வந்திருக்கிறது. ஒரு மனிதனின் வாழ்க்கையையும் முன்னேற்றத்தையும் எந்த இடத்திலும் 'சோர்வு' என்ற ஒன்று ஏற்படாமல் மூன்று மணி நேரம் கொண்டுபோவது மிக அசாதாரண காரியம். அந்த முயற்சியில் மணிரத்னம் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

எல்லா விமர்சனங்களும் ஊடகங்களும் இந்த படம் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரது வாழ்க்கையை பிரதிபலிக்கிறது என்று சொன்னாலும் இதெல்லாம் தெரியாமல் போகும் ஒரு சாதாரண ரசிகனுக்கு ஒரு யதார்த்த வாழ்க்கையை கண்ட திருப்தி ஏற்படும் என்பதில் அச்சமில்லை.
கதாநாயகன் - வில்லன், நல்லவன் - கெட்டவன் என்ற வழக்கமான இந்திய திரைக்கதைகளிலிருந்து 'குரு' ரொம்பவே விலகி யதார்த்தமான வாழ்வைக் கொடுத்திருக்கிறது. படத்தில் வட இந்திய சாயல் ரொம்பவே இருப்பதால் கதாப்பதிரங்களும் காட்ச்சியமைப்புகளும் நிறைய இடங்களில் ஒட்ட மறுக்கின்றன. படத்தின் சுய உரு இந்தி என்பதால் இவற்றை ஓரளவு ஒத்துக்கொள்ள முடிகிறது.

ஹீரோயிசம் என்பது எங்கும் தலை தூக்கக்கூடாது என்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 'க்ளைமாக்ஸ்' ல் கூட அந்த விசயம் எட்டிப் பார்க்கவில்லை. ஆனால் திரைக்கதையில் 'க்ளைமாக்ஸ்' மட்டும் கொஞ்சம் சொதப்பியிருப்பது நன்றாகவே தெரிகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கிறங்கடிக்கிறார். ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவு துள்ளி விளையாடுகிறது. காட்சியமைப்புகளின் வேகம் ஒரே சீரான வேகத்தில் செல்வதால் படத்தோடு ஒன்ற முடிகிறது. இஸ்தான்புல் காட்சியமைப்புகள் தமிழுக்கு புதிது.

திரைக்கதைகளில் எந்த ஒரு கதாநாயகனும் தேவையில்லை. திரைக்கதையும் அதன் யதார்தமும் மட்டுமே நல்ல படங்களாக வரும் என்பதை இந்திய சினிமாவிற்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தியிருக்கிறார் மணிரத்னம். இந்திய சினிமாவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல இந்தப்படம் ஒரு நல்ல ஆரம்பம்.

படங்களில் ஏதாவது ஒரு கதாப்பாத்திரத்தைச் சார்ந்தே ரசிக்கத்தெரிந்த நம் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு ரசனைச் சவால் தான். குருராஜ் என்ற கதாப்பாத்திரத்தின் அறிவையும் திறனையும் ஒரு புறம் ரசித்தாலும் பின்பகுதிகளில் வரும் காட்சிகள் அவரின் முகமுடியை சரியாக் கிழிக்கின்ற்ன.

லட்சியத்திற்காக இயங்கும் ஒரு பத்திரிக்கை, அதற்கு ஒரு லட்சிய ஆசிரியர். அவருக்கு வலக்கையாக நேர்மையும் சாதுர்யமும் நிறைந்த ஒரு பத்திரிக்கையாளன், ஆசிரியரின் மகளாக் நோய்வாய்ப்பட்ட ஒரு மகள். இவர்கள் அனைவருக்குமான உறவை சுருக்கமாகவும், அழுத்தமாகவும், திருத்தமாகவும் கதை நாயகனான தொழிலதிபருடன் இவர்களின் உறவையும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். நடிப்பில் வித்யாபாலன், மாதவன், மிதுன் சக்ரவர்த்தி என்று போட்டிபோட்டாலும் ஐஷ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் மின்னுகிறார்கள். இருவரின் நடிப்புமே மிக யதார்த்தம். அதுவும் அபிஷேக்கின் அந்தச் சிரிப்பில் நிறைய அர்த்தங்கள் தெரிகின்றன. சில இக்கட்டான சூழ்நிலைகளை திரையில் யதார்த்தமாகத் தெரிய வைத்ததில் அபிஷேக்கின் கட்சிதமான நடிப்பு மிகவும் உதவி இருக்கிறது. ஐஷ்வர்யா ராயின் அழகு அவரின் நடிப்பால் கூடியிருப்பது போல் ஒரு உணர்வு. மாதவன், வித்யா பாலன் இருவரும் தேவைக்கு ஏற்ற அளவு நடித்து கைதட்டலை அள்ளிச்செல்கிறார்கள்.

திரைக்கதை, வசனம், நடிப்பு, இசை, ஒளிப்பதிவு எல்லாவற்றிலும் படம் பெரிய அளவு பாராட்டப் பட்டாலும் படத்தில் ஒரு மிகப்பெரிய குறை ஒன்று உள்ளது. படத்தின் ஆக்கம் இந்தியில் என்பதால் காட்சிகளும், கதாபாத்திரப் படைப்புகளும், காட்சிகளின் அமைப்புகளும் தமிழில் ('டப்' செய்யப் பட்டது) பார்க்கும்போது சில இடங்களில் ஒரு அந்நியத் தன்மையால் ஒட்ட மறுக்கின்றன.

இந்தப்படம் கண்டிப்பாக இந்திய சினிமாவிற்குத் தேவையான ஒரு முயற்சி. கண்டிப்பாக மணிரத்னத்திற்கு அதற்கான பாராட்டுக்களும் பெருமைகளும் வந்து சேரும் என்பதில் ஐய்யமில்லை.

No comments: